புதன், 30 ஜூலை, 2014

கும்பகோணம் பெயர் காரணம் - Kumbakonam History in Tamil

இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. 

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.

பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார் , உலகத்தின் பல்வேறு பகுதிலீருந்து மன் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின , இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மன் எடுத்து குடம் செய்து வேதங்களை காத்தார்.





குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.

பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுதகுடத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவிய தலம் குடமூக்கு என்னும் பெயர் தாங்கியுள்ளது என்னும் விளக்கம் குடமூக்கு என்னும் சொற்றொடருக்குத் தரப்படுகிறது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு நாயனாரும் இத்தலத்தை குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் குடந்தை எனவும் பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். திருநாவுக்கரசு நாயனார் தலயாத்திரையைப் பற்றித் தாம் கூறியபோது சேக்கிழார் இத்தலத்தைக் குடமூக்கு என அறிமுகப்படுத்துகிறார். 

திருப்புகழ் பாடியருளிய அருணகிரிநாதர் இத்தலத்துத் திருமுருகன் மீது பாடிய பாட்டில் "மாலைதளி வந்து கும்பகோண நகர் வந்த பெருமாளே" எனப் போற்றியுள்ளார். குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகுதியான கவிதைகளைக் கொண்ட பல நூல்கள் இயற்றிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தாம் எழுதிய திருக்குடந்தைப் புராணத்தின் திருத்தல விசேடப் படலத்திலுள்ள 18ஆவது பாடலில் இத்தலத்தை கும்பகோணம் எனக் கொள்கிறார். இதே படலத்தின் 19ஆவது பாடலில் இதனைக் குடமூக்கு எனக் காட்டுகிறார்.


- பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார் , உலகத்தின் பல்வேறு பகுதிலீருந்து மன் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின , இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மன் எடுத்து குடம் செய்து வேதங்களை காத்தார்.
- குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக