புதன், 30 ஜூலை, 2014

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை

2004ஆம் ஆண்டில் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 94 குழந்தைகளை காவு வாங்கிய தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபராதமாக 51 லட்சத்து 65,700 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


பழனிச்சாமியின் மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, தலைமையாசிரியை சாந்த லெட்சுமி, சத்துணவு அமைப்பாளர்கள் வசந்தி, விஜயலட்சுமி ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 
 மீதமிருக்கும் குற்றவாளிகள் பாலாஜி, சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ் ஆகியோருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குத் தரச்சான்று வழங்கிய பொறியாளர் ஜெயந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் 304 ஏ, பி பிரிவுகளின் கீழ் இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளியின் மேல்மாடியில் இருந்த வகுப்பறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் அந்த அறையில் குழந்தைகள் தீயில் சிக்கிக் கொண்டன. இதில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் 24 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விடுதலை பெற்றனர்.
10 வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
- Source (BBC Tamil)

1 கருத்து: